Breaking News

இந்துத்துவ தீவிரவாதத்தின் பங்களிப்பை அஜ்மீர் தர்கா வழக்கின் தீர்ப்பு உறுதி செய்கிறது : பாப்புலர் ஃப்ரண்ட்

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசிமானந்தா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை விடுவித்தும் முக்கிய சூத்திரதாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வராமலும் வந்துள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதே சமயம், தேவேந்திர குப்தா, பாவேஷ் பட்டேல் மற்றும் மர்மமான சூழல்களில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் சுனில் ஜோஷி ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டிருப்பது 2007ல் நடைபெற்ற இந்த தீவிரவாத தாக்குதலில் இந்துத்துவ அமைப்புகள் மற்றும் தலைவர்களின் மறுக்கமுடியாத பங்களிப்பை தெளிவாக நிறுவுகிறது என்று இ.அபூபக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை, பின்னர் விசாரித்த என்.ஐ.ஏ. ஆகிய விசாரணை அமைப்புகள் அஜ்மீர் தர்கா மற்றும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளை ஒரே இந்துத்துவ தீவிரவாத அமைப்புதான் நிகழ்த்தியதாக கூறியுள்ளன. குற்றவாளிகளான இந்த இந்துத்துவ இயக்கவாதிகளுக்கு இன்ன பிற குண்டுவெடிப்புகளிலும் பங்குள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கல்சாங்ரே, தாங்கே மற்றும் நாயர் ஆகிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை காவலில் எடுக்காததும் அவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுவதும் விசாரணை அமைப்புகளின் தோல்வியாக இருக்கிறது. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் தீவிரவாத தாக்குதல் மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகளிலும் இவர்கள் குற்றவாளிகளாவர்.

ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சந்தேகத்திற்குரியவராக குற்றப்பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. ஆனால் அவர் விசாரிக்கப்படவும் இல்லை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெறவும் இல்லை. அஜ்மீர் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக நடத்தப்பட்ட ரகசிய கூட்டத்தில் இந்திரேஷ் குமாரும் பங்கு பெற்றார் என்று கூட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீவிரவாத வழக்குகள் மற்றும் சதிகளை விசாரிக்கையில் நீதிமன்ற அணுகுமுறையில் உள்ள முரண்பாடுகளையும் இ.அபூபக்கர் கோடிட்டுக்காட்டினார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த போதும் சந்தேகத்தின் பலனின் அடிப்படையில் சுவாமி அசிமானந்தா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் இதே நாட்டில் ஒரு விசாரணை நீதிமன்றம் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருந்ததாக குற்றம் சாட்டி மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவிற்கு ஆயுள் தண்டனை விதித்தது. காவல்துறை சமர்ப்பித்த சில ஆவணங்கள் இவருக்கு தண்டனை வழங்க போதுமான ஆதாரங்களாக இருந்தன. சமீபத்தில் அதிகரித்து வரும் இந்த இரட்டை நீதி போக்கை சரி செய்வதற்கும் அரசியல் பரிமாணம் உள்ள அனைத்து வழக்குகளிலும் சம நீதியை உறுதி செய்வதற்கும் பயனுள்ள ஜனநாயக தலையீடுகளை மேற்கொள்வதற்கு இ. அபூபக்கர் அழைப்பு விடுத்தார்.

இப்படிக்கு

இயக்குநர்,
ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *