Breaking News

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் முழு ஆதரவு! – பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது, மாநில செயலாளர்கள் முஹைதீன் அப்துல் காதர், ஃபயாஸ் அஹமது, மற்றும் அஹமது நவவிஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமம் உட்பட பல கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு அனுமதியளித்துள்ளது. இத்திட்டம் ஏற்கனவே தமிழக மக்களின் தொடர் எதிர்ப்பு போராட்டம் காரணமாக  கைவிடுவதாக மத்திய அரசால் உறுதியளிக்கப்பட்ட மீத்தேனின் மறு உருவம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது விவசாய நிலத்தையும், நிலத்தடி நீரையும் கடுமையாக பாதிப்பதுடன் தமிழகத்தை நீரற்ற வறட்சி மாநிலமாகவே மாற்றிவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நெடுவாசலில் போராடி வரும் மக்களின் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரவு தெரிவிக்கிறது. அவர்களின் போராட்டம் வெற்றி பெறுவதற்கு அவர்களோடு பாப்புலர் ஃப்ரண்ட் கைகோர்க்கிறது.

தீர்மானம் 2 :

தாமிரபரணி ஆற்றில் குளிர்பானங்கள் தயாரிப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் நலனுக்காக இருக்கிறதா, பெரும் நிறுவனங்களுக்காக உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லாததினால் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் என நவம்பர் மாதம் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை விதித்து உத்தரவிட்டது தாமிரபரணியை காக்க வழிவகுத்தது.

இச்சூழலில் குளிர்பான நிறுவனங்கள் செய்த மேல் முறையீட்டினை விசாரித்த இருவர் அமர்வு நீதிமன்றம்  தாமிரபரணியில் குளிர்பானங்கள் தயாரிப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தெடர்ந்த பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
 
தமிழகம் போதிய மழைகளின்றி வறட்சியை கண்டுள்ள சூழலிலும், விவசாயிகள் பலர் தற்கொலை மேற்கொண்டுள்ள நிலையிலும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனால் மேலும் வறட்சியை கண்டு ஒட்டு மொத்த தாமிரபரணியை இழக்க நேரிடும் என்பதில் மாற்று கருத்தில்லை. எனவே இவைகளை கருத்தில் கொண்டு பெரு நிறுவனங்களுக்கு தாமிரபரணியிலிருந்து நீர் வழங்குவதற்கு  மாநில அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கோரிக்கை வைக்கிறது.
 
தீர்மானம் 3 :

முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி, பொருளாதார நிலைகளை ஆய்வு செய்த சச்சார் கமிஷன் முதற்கொண்டு பல கமிஷன்கள் முஸ்லிம்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு போதாது என்றும் அதனை அதிகப்படுத்தி 7% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும்  முஸ்லிம்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. இச்சூழ்நிலையில் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீட்டை 3.5% சதவீதத்திலிருந்து 7% சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று இக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

 
தீர்மானம் 4 :

தமிழ்நாடு முழுவதும் பொது விநியோக முறையின் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக குறிப்பாக பாமாயில், பருப்பு போன்றவை முறையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது. அதனைத்தொடர்ந்து அரிசி, சர்க்கரை தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது என்று செய்திகள் தெரிவிக்கிறது. பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்ற மக்கள் பொருட்கள் ஏதும் இல்லை என்ற செய்திகளின் மூலம் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர். அதேபோல பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு பலமுறை ரேஷன் கடைக்கு சென்றதால் மிகுந்த தொல்லைகளுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம் என்கிற வேதனையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையை பார்க்கும்போது மத்திய அரசு அறிவித்த பொது விநியோக முறை ரத்து என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. எனவே இது விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் முறையாக வழங்கப்பட வேண்டுமென்று இக்கூட்டத்தின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
 
இப்படிக்கு
 
ஏ. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *