Breaking News

முதலமைச்சரின் நடுநிலையற்ற பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! காவல்துறையினர் அரங்கேற்றிய வன்முறை குறித்து நீதிவிசாரணைக்கு உத்திரவிட வேண்டும்

ஜல்லிக்கட்டுக்காக நடத்திய மாணவர்களின் போராட்டம் எழுச்சியுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்ததை உலகமே உற்று நோக்கியது. மாணவர்களின் அறவழி போராராட்டத்தின் விளைவாக தமிழக அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.

மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் தருணத்தில் காவல்துறையின் தவறான அணுகுமுறை போராட்டம் நடத்திய மாணவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அமைந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் வகையில் காவல்துறையினரே பொது சொத்துக்களை நெருப்பிட்டு சேதம் விளைவித்து, மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரையும் கொடூரமாக தாக்கிய நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கர்ப்பிணி பெண்களை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை ஆகும்.

காவல்துறையினர் பொது சொத்துக்களை தீயிட்டு கொளுத்தியதையும், கல்லெறிந்து நாசப்படுத்தியதையும் செய்தி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இருந்த போதிலும் காவல்துறை உயர் அதிகாரிகள் காவல்துறையின் அட்டூழியத்தை மறுத்து, இவை அனைத்தையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களே செய்தார்கள் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களையே இலக்காக வைத்து வீடுகளை சோதனை என்ற பெயரிலும், கைது என்ற பெயரிலும் ஜனநாயக விரோத போக்கை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

நேற்றைய தினம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் காவல் துறையினரின் அறிக்கையை அப்படியே வாசித்துக் காட்டியதாக தெரிகிறது. மேலும் அந்த அறிக்கை ஒரு சமூகத்தின் மீது குற்றம் சாட்டக்கூடியதாகவும் அமைந்திருந்தது வேதனையளிக்கிறது.

அதுமட்டுமல்ல இப்போராட்டத்தில் நடந்த கலவத்திற்கு ஒரு சமூகம் காரணம் என்றும் அதனை தடுப்பதற்கு காவல்துறையினர் நேர்மையாக நடந்ததாகவும் தெரிவித்தார். இது அத்தனையும் உண்மைக்கு புறம்பானது என்பதனை அனைவர்களும் நன்கு அறிவர். எந்த நீதி விசாரணையும் மேற்கொள்ளாமலே நடந்த அசம்பாவிதம் அனைத்திற்கும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தான் காரணம் என்று ஆதாரமற்ற செய்தியை சட்டமன்றத்தில் தெரிவிப்பது முதலமைச்சருக்கு அழகல்ல. அவருக்கு தகவல் கொடுத்த உளவுத்துறைக்கும் அழகல்ல.

முதலமைச்சரின் இவ்வறிக்கை சமூக விரோத செயலில் ஈடுபட்ட காவல்துறையினரை காப்பற்றுவதாகவும், சங்கபரிவார கும்பலை திருப்திபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஏனெனில் போராட்டம் துவக்கத்திலிருந்து அனைத்து மக்களும் மத வேறுபாட்டை மறந்து தமிழர்களாக ஒன்றினைந்து இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டதனை ஏற்றுக் கொள்ளமுடியாமல் சங்கபரிவார பாஜக தலைவர்கள் தொடர்ந்து மத துவேஷ பேச்சுக்களை பேசிவந்தனர். அவர்கள் பேசிய அத்தனை பேச்சுக்களின் தொகுப்பாகவே முதல்வரின் அறிக்கை அமைந்து இருந்தது. முதல்வரின் நடுநிலையற்ற இந்த அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கிறது.

காவல்துறையின் சமூக விரோத செயல்களை நியாயப்படுத்தாமல் நீதிபதிகளை கொண்ட ஒரு சுதந்திரமான நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும், குற்றவாளிகளை சரியாக அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மத துவேஷ கருத்துக்களை பரப்பும் எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
 

இப்படிக்கு 

எம்.முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *