Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவராக ஜெ. முகம்மது ரசின் தேர்வு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (26.01.2017) பெரியபட்டினம் நகர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகம்மது ரசின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முகம்மது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மாவட்ட தலைவராக ஜெ. முகம்மது ரசின் அவர்களும், மாவட்ட செயலாளராக M.நியாஸ் கான் அவர்களும் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக இராமநாதபுரம் சேக் அப்துல்லாஹ் மற்றும் இப்ராஹிம், கீழக்கரை முபீஸ், வாலிநோக்கம் பரக்கத்துல்லாஹ், போகலூர் செய்யது, பெரியபட்டிணம் பசீர் அலி மற்றும் அமீன், பனைக்குளம் ரியாஸ் அகமது, புதுவலசை ரிஸ்வான், இருமேனி நவர்ஷா, பாம்பன் பைசல் ஆகியோர் முடிவுசெய்யப்பட்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் M.நியாஸ் கான் நன்றியுரை நிகழ்த்தினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

1. விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர். இந்நிலையில் வறட்சி பாதிப்பை கண்டறிய மத்திய அரசால் அனுப்பப்பட்ட மத்திய குழு இராமநாதபுரம் மாவட்டம் 100 சதவீதம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணத் தொகையையும் மத்திய, மாநில அரசுகள் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுகொள்கின்றது.

2. குடிநீர் பற்றாக்குறையை போக்க துரித நடவடிக்கை வேண்டும்

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகளத்தூர் மற்றும் திருவாடனை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து வந்த நிலையில் தற்போதைய சூழல் அதை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் குடிநீருக்காக பொதுமக்கள் அலையக்கூடிய சூழலும் நிலவுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் இது விசயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுகொள்கின்றது.

3. கருவேல மரங்களை அகற்றுவதை துரிதப்படுத்த வேண்டும்

நிலத்தடி நீர் பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கக்கூடிய கருவேலை மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதை இச்செயற்குழு வரவேற்கிறது. இது விசயத்தில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றது.

4. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு எதிராக உள்ள தடைகளை நீக்கவும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை இச்செயற்குழு வரவேற்கிறது. மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டம் உலக போராட்டங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. ஆனால் இறுதியாக நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் அதில் காவல்துறையின் நடவடிக்கைகளும் வேதனை அளிப்பதாக உள்ளது. காவல் துறையினரே வீடுகளுக்கு தீவைப்பதும், வாகனங்களை உடைப்பதும், பொதுமக்களை நோக்கி கற்களை எறிவதுமான சம்பவங்கள் மக்களுக்கு காவல்துறை குறித்தான அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது. எனவே தவறு செய்த காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவும் இச்செயற்குழு கேட்டுகொள்கின்றது.

5. சேது கால்வாய் திட்டம் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்

மிகவும் பின் தங்கிய இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில் வளத்தை மேம்படுத்தும் திட்டமான சேதுகால்வாய் திட்டம் பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்தியில் ஆளும் பா ஜ க அரசு இத்திட்டத்திற்கு எதிரான செயல்திட்டத்தை கொண்டுள்ளது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு பயன் அளிக்ககூடிய சேதுகால்வாய் திட்டத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது. எனவே சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தாமதமின்றி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுகொள்கின்றது.

6. இராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி கொண்டுவர வேண்டும்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி கொண்டுவர வேண்டும் என்ற மாவட்ட மக்களின் கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமலயே உள்ளது. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என மாநில அரசிற்கு இச்செயற்குழு கோரிக்கை வைக்கிறது.

7. ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறை கைதிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீளிக்கப்படாமலேயே உள்ளது. தமிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இவ்வேளையில் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது என்பது சாலச்சிறந்ததாக இருக்க முடிவும். எனவே எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அஇஅதிமுக அரசு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுகொள்கின்றது.

 

ramnad1_o ramnad-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *