Breaking News

மதுரையில் நடைபெற்ற சிறுபான்மை மாணவ / மாணவிகளுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 அறிக்கையானது சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தேசிய அளவில் பின்தங்கியுள்ள நிலையை படம்பிடித்து காட்டுகிறது. பிற சிறுபான்மை சமூகங்கள் முக்கிய பங்களிக்கும் கல்வி வளர்ச்சியில் கூட முஸ்லிம் சமூகம் இன்னமும் தன்னிறைவு அடையவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

நமது மாநிலத்திலும் கூட முஸ்லிம்களின் நிலை இவ்வாறே உள்ளது. தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் சுமார் 23 சதவிகிதத்தினர் எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர். மேலும் மற்ற சமூகங்களை காட்டிலும் கல்வி இடைநிற்றல் (Drop- Outs) அதிகமாக உள்ளது. அதுபோல் முஸ்லிம் ஆண்களில் 12ல் ஒருவர் மட்டுமே இளநிலை பட்டம் (Under Graduate Degree) பெற்றுள்ளனர். முஸ்லிம் பெண்களில் 20ல் ஒருவர் மட்டுமே இளநிலை பட்டம் (Under Graduate Degree) பெற்றுள்ளனர், தமிழகத்தில் வாழும் மற்ற சிறுபான்மை சமூகத்துடன் ஒப்பிடும் பொழுது இது சுமார் 3 மடங்கு குறைவாகும் என்பதனை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 குறிப்பிடுகிறது. சுதந்திரத்திலிருந்து இன்று வரை சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நிலையை முன்னேற்ற மத்திய அரசுகள் தொடர்ந்து செய்த ஒரே பணி கமிஷன்களை அமைப்பது மட்டுமே. மத்திய அரசையும், மாநில அரசுகளையும் தங்களது கடமையை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதே தருணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது சமூக பொறுப்பினை தொடர்ந்து செய்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பள்ளி செல்வோம் என்ற பிரச்சாரத்தின் வாயிலாக கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், சர்வ சிக் ஷா கிராம் (SarvaSiksha Gram- SSG)என்கிற முழுமையான கல்வி கிராமத்தை ஏற்படுத்தல், ஏழை மாணவ/மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற எண்ணற்ற கல்வி சேவைகள் செய்வதில் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் முன்னணி வகிக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த 5 ஆண்டுகளாக கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியதாகவும், பொருளாதார சிரமத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு உதவியாகவும் இருந்து வருகிறது. முதலில் 3 இலட்சமாக 2010 ஆம் ஆண்டில் துவங்கி 2011 கல்வி ஆண்டில் 7 இலட்சமாகவும் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் அதிகப்படியான தேவையுடைய மக்களுக்கு உதவிகள் சென்றடைய பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2014-15 கல்வி ஆண்டில் 15 இலட்ச ரூபாயை 191 மாணவ/மாணவிகளுக்கு வழங்கினோம், மேலும் கடந்த 2015-16 கல்வி ஆண்டு 17 இலட்ச ரூபாயை 202 மாணவ/மாணவிகளுக்கு வழங்கினோம்.

இதன் தொடர்ச்சியாக இந்த 2016-2017 கல்வி ஆண்டில் 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது, தமிழகம் முழுவதும் 6 பகுதிகளில் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06-11-2016 அன்று காலை 10.30 மணிக்கு சிறுபான்மை மாணவ/மாணவிகளுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் A.அம்ஜத் இப்ராஹிம் B.B.E.,அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது இப்ராஹிம் அவர்கள் முன்னிலை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட செயலாளர்S.முஹம்மதுஅபுதாஹிர்DCE., MA (JMC)., அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஆக்சஸ் இந்தியாவின் திறன் மேம்பாட்டு வல்லுநர் S.ரியாஸ் MBA(HR)., அவர்கள் மாணவர்களின் அணுகுமுறை மற்றும் வாழ்வின் நோக்கம் என்கிற தலைப்புகளில் உரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் S.இல்யாஸ் DEEE., MA (JMC)., மற்றும் SDPI கட்சியின் மதுரை மண்டல செயலாளர் S.P.நஸ்ருதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறுபான்மை மாணவ/மாணவிகளுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகையை வழங்கியதுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

 

madurai (8) madurai (7) madurai (6) madurai (5) madurai (4) madurai (3) madurai (2) madurai (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *