Breaking News

மஸாரத் ஆலம் விடுதலை: ஏன் இந்த களேபரம்? – அ.செய்யது அலீ

20150311113805அரசியல் விசித்திரமான கூட்டாளிகளை உருவாக்கும் என்பது சரியாக இருந்தாலும் அமைதி இழந்து காணப்படும் ஜம்மு-கஷ்மீரில் பா.ஜ.க, கஷ்மீர் போராட்ட இயக்கங்களுடன் நெருக்கமான பி.டி.பியுடன் தான் அதிகாரத்தை பங்கிடுகிறது. இரு கட்சிகளும் மாறுபட்ட துருவங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், கஷ்மீர் ஹுர்ரியத் தலைவர் மஸாரத் ஆலமை விடுவித்த முஃப்தி முஹம்மது ஸயீதின் நடவடிக்கைக்குறித்து நரேந்திரமோடியும், பா.ஜ.க தலைவர்களும் களேபரங்களில் ஈடுபடுவது ஒரு நகை முரணான கூட்டணியின் மூடத்தனத்தை, மறைப்பதற்கான நாடகமாகும். காரணம், சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை வைத்துள்ள ஒரு ஜனநாயக அரசிற்கு ஆலமை விடுதலைச் செய்வதே கருணையான நடவடிக்கையாக அமையும்.

2010-ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு தலைமை வகித்த குற்றத்திற்காக பல்வேறு வழக்குகள் மஸாரத் ஆலமின் மீது சுமத்தப்பட்டது. 120க்கும் மேற்பட்ட சாதாரண மக்களை கொலைச் செய்து அந்த போராட்டத்தை ராணுவம் அடக்கி ஒடுக்கியதை யாரும் மறந்துவிடமுடியாது. மஸாரத் ஆலமின் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் ஜாமீன் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க தடைக்கோரி மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஆளுநர் ஆட்சியின்போதே மஸாரத் ஆலமை விடுவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மஸாரத் ஆலம் மீது பிரயோகிக்கப்பட்ட பொது பாதுகாப்புச் சட்டம், யு.ஏ.பி.ஏ, அப்ஸா போன்ற கறுப்புச் சட்டங்களை போன்றதாகும். மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட இச்சட்டம், கஷ்மீரில் மக்கள் எழுச்சிப்போராட்டங்களை அடக்கி ஒடுக்கவே அரசு கட்டுப்பாடு இல்லாமல் உபயோகித்து வந்தது. அதற்கு இரையானவர்தாம் மஸாரத் ஆலம்.

அதேவேளையில், கஷ்மீர் முதல்வர் முஃப்தி முஹம்மது ஸயீதின் இந்நடவடிக்கை முற்றிலும் களங்கமற்றது என்றும் கருதிவிடமுடியாது. இந்நடவடிக்கையின் மூலம் பெரும்பாலான கஷ்மீர் மக்களின் ஆதரவை பெற்றுவிடலாம் என்ற கணக்கும் முஃப்திக்கு உண்டு. அதிகாரத்தை கைப்பற்றிவிட்டால் கட்சியின் செல்வாக்கை அதிகரித்துவிடலாம் என்ற எண்ணம் பிடிபி தலைமைக்கு இருக்கலாம்.

மஸாரத் ஆலமின் விடுதலை, இரு கட்சிகள் இடையேயான கஷ்மீர் மக்களின் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் முடிவுக்கு கொண்டு வர அனைத்து பிரிவு மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்சனைக்கு தீர்வு காணவே மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கவேண்டும்.அதை விடுத்து இத்தகைய நாடகங்களில் ஈடுபடுவதில் எத்தகைய பலனும் இல்லை.

அ.செய்யது அலீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *