Breaking News

தாயகம் திரும்பிய செவிலியர்கள்!ஆறுதலை தரும் செய்தி! – அ.செய்யது அலீ.

20140707124735ஈராக்கின் யுத்த பூமியில் இருந்து எவ்வித காயமுமின்றி இந்திய செவிலியர்கள் திரும்பி வந்தது அனைவருக்கும் ஆறுதலை தரும் செய்தியாகும். ஈராக்கின் திக்ரித் மருத்துவமனையில் பணியாற்றிய 46 செவிலியர்கள் கொச்சி விமானநிலையத்தை வந்தடைந்தபோது அவரது உறவினர்களுடன், இந்த தேச மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.பீதி மாறாத உறவினர்களுடன்
இணைந்து தங்களது மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்துகொண்டபோது மீண்டும் உயிர் பெற்றதைப்போன்று உணர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

ஈராக்கில் சுன்னிப்போராளிகளைக் குறித்து திகிலை ஏற்படுத்தும் செய்திகளுடன் கூடிய கறுப்பு நிறத்திலான புகைப்படங்களை சில பத்திரிகைகளும், தொலைக்காட்சி சானல்களும் தொடர்ந்து பரப்புரைச் செய்து பலருடைய உள்ளங்களிலும் கிலியை ஏற்படுத்தியிருந்தன.

யுத்த பூமியில் சிக்கிய செவிலியர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்துவருவதில் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட்ட கேரள முதல்வர் உம்மன்சாண்டி பாராட்டுக்குரியவர்.ஈராக்கில் இந்திய தூதரகத்துடன் கவனமாக இங்கிருந்து அங்குள்ள நிலைமைகளை அவதானித்து அதிகாரிகள் எடுத்த கடுமையான முயற்சி சாதாரண காரியமல்ல.தூதரகத்திலிருந்து குழப்பம் ஏற்படுத்தும் செய்திகளே யுத்த பூமியில் சிக்கியவர்களுக்கு கிடைத்து வந்தது.

ஈராக் ராணுவத்தின் குண்டுவீச்சு மூலம் ஆபத்தில் சிக்கிய செவிலியர்களை மொசூலுக்கு பாதுகாப்பாக கொண்டு வந்தவர்கள் சுன்னிப் போராளிகளாவர்.

செவிலியர்களை துன்புறுத்துவதோ, தொந்தரவுச் செய்வதோ போராளிகளின் நோக்கமல்ல. அதுமட்டுமல்ல, போராளிகள் தங்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டார்கள்;அவர்கள் எங்களை தொடவே இல்லை; ரமலான் மாதமாக இருந்தபோதிலும் உணவு வழங்கினர் என்றெல்லாம் திரும்பி வந்த செவிலியர்கள் நன்றியுடன் நினைவுக் கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

செவிலியர்கள் மற்றும் இதர இந்திய தொழிலாளர்களின் துயர நிலைக்கு காரணம் பாக்தாதை ஆளும் நூரி அல் மாலிகின் அரசுதான் என கருதப்படுகிறது.

கடைசி நேரத்தில்தான் மத்திய அரசு இவ்விவகாரத்தில் அலட்சியப் போக்கை கைவிட்டு நடவடிக்கையில் இறங்கியது.பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விவகாரத்தில் நமது அரசுகள் காட்டும் அலட்சியம் பிரபலமானது.பிரவாசி பாரதீய திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்தும், வளைகுடா நாடுகளிலிருந்தும் வரும் பணக்காரர்களுக்கு விருது வழங்குவதும், அவர்களின் நன்கொடைகளை பெற்றுக்கொள்வதையும் தவிர வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு என்னச் செய்துள்ளது?.வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வேலை, இருப்பிடம், சேவை சலுகைகள் உள்ளிட்டவைக் குறித்த சட்டங்களை இயற்றுவதிலோ, அவசரக்கட்டங்களில் அவர்களுக்கு உதவிபுரிய தூதரக சேவைகளை அளிப்பதிலோ இந்திய அரசு அலட்சியம் காட்டுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் சுட்டிக்காட்டுகிறது.பலரும் ஏமாற்றப்படுகின்றார்கள்; அடிமைகளைப்போல வேலைவாங்கப்படுகின்றார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விவகாரத்தில் மத்தியில் ஆளும் அரசுகள் அலட்சியப் போக்கை கையாண்டு வருகின்றன.இந்திய அரசின் வருமானத்தின் குறிப்பிட்ட சதவீதம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பும் அந்நிய செலவாணி மூலம் கிடைக்கும்போதும் அதற்கு பதிலீடாக தேவையான சட்டங்களையும், வசதிகளையும் அளிப்பதில் இந்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது.

ஈராக்கில் இருந்து செவிலியர்கள் உள்ளிட்ட இந்திய தொழிலாளர்கள் வேலையின்றி திரும்பி வந்துள்ளனர்.பலருக்கும் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய செவிலியர்கள் ஈராக்கின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர்.கட்டுமான தொழிலார்களைக் குறித்த துல்லியமான புள்ளிவிபரங்கள் கூட அரசிடம் இல்லை.இவ்வேளையில் திரும்பி வரும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அவசர நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து மேற்கொள்வது அவசியமாகும்.

அ.செய்யது அலீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *