Breaking News

பொது சிவில் சட்டம் : கட்ஜு தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்! – அ. செய்யது அலீ

20140602204156அறிவாளிகள் சில நேரங்களில் அவசர கோலத்தில் எதைக் குறித்தும் சிந்திக்காமல் கருத்துகளை வெளியிடுவார்கள் என்பதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஓர் உதாரணம்.

முன்னர் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் தாடி வைத்ததற்காக தனக்கு எதிராக பள்ளிக்கூடம் நடவடிக்கை எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, அன்று நீதிபதியாக இருந்த கட்ஜு, தாடி வைப்பது தாலிபானிசம் என்ற அறிவுப்பூர்வமான (?) கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்தார். ஊடகங்களின் ஒரு சார்பு நிலைக்கு எதிராகவும், முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து தன்னை ஒரு நடுநிலைவாதியாக முன்னிறுத்தினார்.

தற்போது மோடி அரசு மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய சூழலில் சங்க் பரிவாரத்தின் கருத்தினை பிரதிபலிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைக்கு குடியுரிமை சார்ந்த அவர்களுக்கான தனிச் சட்டம் நவீனமயமாக்கப்படாததே காரணம் என்று கட்ஜு கூறுகிறார். இவரைப் போன்ற நீதிபதியான ராஜேந்திர சச்சார் தலைமையில் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கான காரணங்களை ஆராய முந்தைய மன்மோகன் சிங் அரசு ஒரு கமிட்டியை நியமித்தது.

இக்கமிட்டி நாடு முழுவதும் முஸ்லிம்களின் நிலைமையை விரிவாக ஆராய்ந்து அரசுக்கு காரணங்களையும், பரிந்துரைகளையும் சமர்ப்பித்தது. அடையாளம், சமத்துவம், பாதுகாப்பு இம்மூன்று காரணிகளிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதே அவர்களுடைய பின்தங்கிய நிலைக்கு காரணம் என்று சச்சார் கமிட்டி அறிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது.

உலகில் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாமிய குடியுரிமைச் சட்டங்களை அன்றாடம் தமது வாழ்வில் கடைப்பிடித்து வருகின்றார்கள். அச்சட்டங்களை கடைப்பிடித்ததன் காரணமாக முஸ்லிம்கள் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டார்கள் என்று உலகில் யாரும் இதுவரை கண்டுபிடித்துக் கூறவில்லை. கட்ஜு புதிதாக ஒரு காரணத்தை கண்டுபிடித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் என்பது அரசியல் சாசனச் சட்டத்தின் 44-வது பிரிவு 14 வழிகாட்டுதல்களில் ஒன்று மட்டுமே.

இதில் ஒன்று சம வேலைக்கு சம கூலி என்பதாகும். ஆனால், இந்தியாவில் அது முழு அளவில் அமல் படுத்தப்படவில்லை.

வேலையின்மை, முதுமை, ஊனம், நோய் போன்றவற்றால் கஷ்டப்படுபவர்களுக்கு பொருளுதவி செய்யவேண்டும் என்ற கட்டளை எத்தனை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?

மது விலக்கு முக்கிய வழிகாட்டிக் கொள்கையாக அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை அமல்படுத்த எந்த மதமும் தடையாக இல்லை. அவ்வாறு இருந்தும் பல மாநிலங்களில் இந்த வழிகாட்டிக் கொள்கை அமல்படுத்தப்படவேயில்லை.

பொதுசிவில் சட்டத்திற்காக குரல் எழுப்புவோரில் சங்க பரிவார்கள் முன்னணியில் உள்ளனர். பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்துத்துவ கொள்கையுடையோராக இருப்பதால் இன்றைய இந்து சட்டத்தொகுப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்து அதையே பொது சிவில் சட்டம் என்பார்கள் என்பதில் ஐயமில்லை.

லண்டன் பல்கலைக் கழகத்தின் கிழக்கிந்திய சட்டப் பேராசிரியர் ஜே. டங்கன் தன்னுடைய “இந்தியாவில் மதம் சட்டம் அரசு” என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: “இந்திய அரசியல் சாசனத்தில் 44-ஆம் பிரிவில் வாக்களிக்கப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் – நான் முன் பக்கங்களில் விவாதித்த இந்து சட்டத் தொகுப்புக்கு ஒப்பாகவே இருக்கும். அதனை பொது சிவில் சட்டம் என வர்ணிப்பது தவறாகும். ஆனால், அது வசதியான பெயராக அமைந்துவிட்டது.”

இந்திய அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு, “எல்லா குடிமக்களும் மனசாட்சி சுதந்திரத்திற்கு சமமான உரிமை பெற்றவர்கள். தனக்கு விருப்பமான மதத்தில் நம்பிக்கை கொண்டு அதனை ஏற்றுக்கொண்டு செயல்படவும் அதனை பிரச்சாரம் செய்யவும் எல்லா குடிமக்களுக்கும் உரிமை உண்டு” என்று கூறுகிறது.

மதம் என்பது நம்பிக்கை கொள்வது மட்டுமல்ல. அதனை செயல்படுத்துவதற்கு தேவையான சுதந்திரத்தையும் இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதற்கு முரணான அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைச் சட்டமான 44-வது பிரிவை மட்டும் பிடித்துக்கொண்டு குரல் எழுப்புவது ஏன்?

இதுவெல்லாம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த கட்ஜுவுக்கு தெரியாதா என்ன?

அடுத்து இன்னொரு அறிவுப்பூர்வமான காரணத்தையும் கட்ஜு உரைத்துள்ளார். “இந்தியாவில் குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவற்றில் பல முஸ்லிம்களின் ஷரீஆ சட்டத்திற்கு எதிராக இருந்தாலும் முஸ்லிம்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அவ்வாறிருக்கையில் குடியுரிமைச் சட்டத்தை மட்டும் அவர்கள் பற்றிப் பிடித்திருப்பது ஏன்?” என்ற தொனியில் கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றவியல் சட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது சிவில் சட்டம். குற்றவியல் சட்டங்களின் தேவை என்பது குற்றம் செய்த பின்பே உருவாகும். சிவில் சட்டமானது வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க கூடியது. இந்த வேற்றுமை ஏன் நீதியரசருக்கு புரியவில்லை?

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்றவை சிவில் சட்டத்தில் வருகிறது. இதற்காக இஸ்லாத்தில் தனித் தன்மையுடன் கூடிய சட்டங்கள் உண்டு. அவை இறைவனாலும், இறைத்தூதராலும் வழங்கப்பட்டவை. உலக முஸ்லிம்கள் எக்காலக் கட்டத்திலும், எச்சூழ்நிலையிலும் அதைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். இதற்கு மாற்றமான சட்டத்தை முஸ்லிம்கள் ஏற்று நடந்தால் அவர்கள் வாழ்வு பயனற்றதாகிவிடும்.

கிரிமினல் சட்டங்கள் அப்படிப்பட்டதல்ல. திருட்டு, விபச்சாரம், மது அருந்துதல், கொலை உள்ளிட்ட குற்றங்களைச் செய்யக்கூடாது என்று கற்பிக்கப்பட்டவனே முஸ்லிம். அதனால் நாட்டில் கிரிமினல் சட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு பாதகமில்லை. அந்தக் குற்றங்களை விட்டும் தன்னை தவிர்த்துக்கொண்டாலே போதும். இத்தகைய குற்றங்களை முஸ்லிம்கள் செய்தாலும், அதனால் கிடைக்கும் தண்டனைகளால் நம்பிக்கை பாதிக்கப்படுவதில்லை.

இஸ்லாமிய கிரிமினல் சட்டமும், இந்திய தண்டனைச் சட்டமும் குற்றங்களை குற்றம் என்றே கூறுகிறது. தண்டனை வழங்குவதில் கூடுதல், குறைவுகள் உள்ளன. குற்றவியல் சட்டங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டனை பெறுவதில்தான் கூடுதல், குறைவு ஏற்படுகிறது.

சிவில் சட்டங்கள் வாழ்க்கையின் அடிப்படையையே மாற்றக் கூடியது. குற்றவியல் சட்டங்கள் என்பது ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களால் நடைமுறைப்படுத்தக்கூடியது. ஆனால், சிவில் சட்டங்களை கடைப்பிடிக்க ஆட்சி, அதிகாரம் தேவையில்லை. ஏனெனில் அது தனி மனிதர்களுடன் தொடர்புடையது. ஆகவே இஸ்லாமிய சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் கைவிடவேண்டும் என்பதற்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அமலில் இல்லை என்று காரணம் கூறுவது பொருத்தமானதாக இல்லை.

இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும், குடிமக்களின் வாழ்வு வளம் பெறவும் எந்தச் சட்டம் தேவையோ அதனைக் குறித்த கோரிக்கைகள் எழுப்பப்படவேண்டும். நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு, வறுமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுமானால் அதனை வரவேற்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு பல்வேறு மதங்கள், சாதிகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட மக்கள் வாழும் இந்த தேசத்தில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று குரல் எழுப்புவதன் பொருள் என்ன?

ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் ஃபெடரல் கொள்கையை ஆதரிப்பவர்கள் நாம். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் இது ஆகுமென்றால் மக்கள் விஷயத்தில் மட்டும் ஏன் ஆகாது? அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இல்லை என்பது இங்கு கவனத்திற்குரியது.

முஸ்லிம்கள் இஸ்லாமிய சிவில் சட்டத்தை கடைப்பிடிப்பதால் இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கோ, பாதுகாப்பிற்கோ, முன்னேற்றத்திற்கோ எந்த குந்தகமும் விளையப் போவதில்லை. இதர மதத்தினருக்கும் இதனால் எவ்வித தொந்தரவும் எழாது. ஆகவே பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கை முஸ்லிம்களின் அடையாளத்தை அழிப்பதற்கான சதித் திட்டமே. இதனை கட்ஜு போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அ. செய்யது அலீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *