Breaking News

மம்தாவின் மமதையும், தேர்தல் ஆணையமும்!

20140410123238

ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்நாட்டின் சட்டங்களெல்லாம் எங்களுக்கு பொருந்தாது என்ற கட்டமைக்கப்பட்ட மனோநிலை இந்திய ஆட்சியாளர்களிடம் நிலவி வருகிறது. ஆட்சிக் கட்டிலில் அமரும் வரை நேர்மையாளர்களாக வேடமணிபவர்கள் அதிகாரம் தங்களது கரங்களுக்கு வந்த பிறகு போடும் ஆட்டத்தை நாட்டு மக்கள் கண்டு வருகின்றார்கள். இதில் எந்த அரசியல் கட்சியும் விதி விலக்கல்ல. ஐந்தாண்டுகள் ஆட்சியை சகித்துக்கொள்ளும் மக்களின் கோபம் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும் வரை இவர்களது கோலாகலம் தொடரும்.

அதேவேளையில், அரசியல் சாசன கட்டமைப்புகளை மதிக்கவும், மேலோட்டமாக அரசியல் சாசன அமைப்பிடம் பொறுப்புணர்வை காட்டவும் பொதுத் தேர்தல் காலங்களில் பெரும்பாலும் அனைத்து கட்சியினரும் தயாராவர். குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைக் குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை. தேர்தல் ஆணையம் வலுவாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டால்தான் வெளிப்படையான சுதந்திரமான தேர்தல் நடைபெறும் என்ற எண்ணமே அதற்கு காரணம். தேர்தல்கள் மீதான நம்பிக்கை ஜனநாயக கட்டமைப்பின் பாதுகாப்புக்கு முக்கியமானது. அதுமட்டுமல்ல, அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைகள் துவங்கிவிட்டால் அதன் முழு பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்துக்கு விசுவாசமாக கட்டுப்பட்டு நடந்துகொள்ளவேண்டும். இந்த தத்துவங்களையெல்லாம் முந்தைய காலங்களில் ஆளும் கட்சியினர் கண்டுகொள்வதில்லை. ஆனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக டி.என்.ஷேசன் பொறுப்பேற்ற பிறகு ஆணையத்தின் அதிகாரத்தையும், பதவியின் கம்பீரத்தையும் கையிலெடுத்தார். பின்னர் வந்த தேர்தல் ஆணையாளர்களும் தங்களுடைய அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான கடமைகளை நிறைவேற்றுவதில் வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்திற்கு பல்வேறு குணாதிசயங்கள் இருந்தாலும் அதன் நம்பகத்தன்மையும், சர்வதேச அளவிலான மதிப்பும் உயர்ந்து நிற்பதற்கும் இதுவே காரணமாகும்.

ஆனால், இதுவெல்லாம் தனக்கு பொருந்தாது என்ற மட்டில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தோடு நடந்துகொண்டார். திரிணாமுல் காங்கிரஸின் ஏஜண்டுகளைப் போல செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட சில உயர் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிராகரிக்க முற்பட்டார் மம்தா. மேற்கு வங்காளத்தில் மக்களை ஏமாற்றுவதை தொழிலாக கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசை தோற்கடித்ததன் அகங்காரம் மம்தாவை பிடித்து ஆட்டுகிறது போலும். இதுதான் தன்னை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற மமதை மம்தாவுக்கு ஏற்பட்டுவிட்டது. தங்களுடைய உத்தரவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் தொடர்புடைய பகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவித்ததை தொடர்ந்து மம்தா இறங்கி வந்தார்.தேர்தலை ஒத்திவைத்தால் திரிணாமுல் காங்கிரசுக்கு கிடைக்கும் சீட்டுகளின் எண்ணிக்கை குறையுமே தவிர தேசம் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது என்பதை காலதாமதமாகவே மம்தா உணர்ந்துகொண்டார்.

அரசியல் சாசன ரீதியிலான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டால் நாட்டிற்கும், அவர்களுக்கும் நல்லது.

அ.செய்யதுஅலீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *