Breaking News

டெல்லி: சமூக நீதி மாநாடு ஒன்று திரண்ட முஸ்லிம்கள் திணறிய தலைநகரம் நவம்பர் 26-27 ஒன்றிணைவோம், சக்திபடுவோம் ‘சமூக நீதி’ மாநாட்டில் கருத்தரங்கம்

20120806181603பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு டெல்லியில் நவம்பர் 26 ல் துவங்கியது. சரியாக காலை 9.30 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பெய்க் அவர்கள் மாநாட்டு வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ. எம். அப்துர் ரஹ்மான் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கினார். ஆயிரக்கணக்கில் குழுமியிருந்த மக்கள் கோஷங்களை எழுப்ப கொடியேற்ற நிகழ்ச்சி நிறைவேறியது.
அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் தேசிய மில்லி கன்வன்ஷன் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர் ஜனாப். கே.எம். ஷரீஃப் தலைமை தாங்க “ஒன்றிணைவோம், சக்திபெறுவோம்” என்ற கருத்தில் பல்வேறு தலைப்புகளில் முக்கிய தலைவர்கள் உரையாற்றினார்கள். இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த தலைவர்களையும் பொது மக்களையும் இம்மாநாட்டின் டெல்லி ஒருங்கிணைப்பாளரான கலீமுல்லாஹ் சித்தீகி வரவேற்றார்.
அவரை தொடர்ந்து டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் மவ்லானா முஃப்தி முஹம்மது அக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள். அவரது உரையில் காந்திஜி நீதியை பற்றி குறிப்பிடும் போது கலீபா உமர் அவர்களின் ஆட்சி இந்தியாவில் இருந்தால் தான் நீதி நிலைநாட்டப்படும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார். மேலும், சமூக நீதி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று எனவும் நம் நாட்டில் முஸ்லிம்கள் நீதி மறுக்கப்பட்ட சமூகங்களாக இருப்பதை குறிப்பிட்டார். இத்தகைய சமூக நீதியினை பெற ஜனநாயக முறையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் கருத்தரங்கின் கருப்பொருளை விளக்கினார். அவரது உரையில் சமூக நீதி என்பது அனைத்து சமூகங்களும் பாரபட்சமின்றி நடத்தப்படுவதாகும். இன்று சச்சார் கமிஷன் அறிக்கை முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்று உணர்த்துகிறது. வறுமை, விலைவாசி ஏற்றம் என்று பெரும் பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள்.
சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் ஒரு புறம் சங்க பரிவாரங்களின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மறுபுறம் காவல்துறையினாரால் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். பொய்யான வழக்குகளில் சேர்க்கப்பட்டு முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் அரசியல் தளத்திலும் ஒரங்கட்டப்படுகிறார்கள். முதலாளித்துவ கொள்கை மக்களை மேலும் மேலும் ஏழ்மை நிலைக்கே தள்ளுகிறது. இத்தகைய அநீதிகளுக்கு எதிராக போராடி நம் அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்ட சமூக நீதியினை ஜனநாயக முறையில் போராடி பெறுவதே சமூக நீதி மாநாட்டின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி தேசிய செயலாளர் ஏ.சயீது அவர்கள் இந்திய குடிமகனாக முஸ்லிம் என்ற தலைப்பில் உரையாற்றினார். முஸ்லிம்கள் நம் நாட்டு கலாச்சாரத்திற்கு அளித்த பங்கு, சுதந்திர போராட்டத்தில் அவர்களின் தியாகம் போன்றவற்றை குறிப்பிட்டு தற்போது நிகழும் அவல நிலை நீங்க மதசார்பற்ற ஜனநாயக முறையில் வலுவாக போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவரை, தொடர்ந்து டெல்லி ஹம்தர்து பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். ஸஃபியா ஆமிர் அவர்கள் கலாச்சார அடையாளத்தினை பாதுகாப்பது பற்றி உரையாற்றினார். ஒவ்வொரு சமூகத்திற்கும் தனது கலாச்சாரத்தை பாதுகாக்க உரிமையுள்ளதையும், அரசு அனைத்து சமூக மக்களிடையேயும் பாகுபாடில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து அலிகர் முஸ்லிம் பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். அர்ஷி கான் அவர்கள் உரையாற்றினார்கள். ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களிடையேயும் கடைபிடிக்கப்படும் பாரபட்சத்தினை பற்றி குறிப்பிட்டார். எனவே, நம் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக அநீதிக்குட்பட்ட முஸ்லிம்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்க்கும் நீதி கிடைக்க போராடுவது மதவாதமாக ஆகாது என்று குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து மூவ்மண்ட் ஃபார் முஸ்லிம் எம்பவர்மண்ட் இயக்கத்தின் பொது செயலாளர் நவீது ஹாமித் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும், சக்திபடுதலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு கோரிக்கை என்பது ஏதோ ஒரு சிறப்பு சலுகைக்கான கோரிக்கை அல்ல எனவும் இடஒதுக்கீடு வழங்குவது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார். ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் நம் நாட்டு அரசியல் சாசன சட்டம் இயற்றப்படும் போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்களித்ததை நினைவு கூர்ந்தார்.
அவரை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாஹர் பர்கி நீதித்துறை மற்றும் சிறுபான்மையினர் உரிமை என்ற தலைப்பில் பேசினார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தினை சிறுபான்மையினர் பல்கலைக்கழகம் என்று ஏற்றுக் கொள்ள உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பல காவல்துறை அதிகாரிகளை மும்பை கலவரத்தில் கலவரக்காரர்களுக்கு துணை நின்றதை வெளிப்படுத்தியும் அவர்களை தண்டனைக்குட்படுத்தாமல் மேலும் பதவி உயர்வுகளை வழங்கியது நீதித்துறை சிறுபான்மையினர் விஷயத்தில் நீதி வழங்க தோற்றுவித்ததை உணர்த்துகிறது என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் பொது செயலாளர் ஹாபிஸ் மன்சூர் அவர்கள் அரசியல் தளத்தில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் பேசும் போது முஸ்லிம்கள் அரசியலில் மிகக்குறைந்த அளவே பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டதையும் கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்கள் கூட முஸ்லிம்களது பிரச்சனைகளை பற்றி பேச முடியாத நிலையையும் குறிப்பிட்டு ஒரு மாற்று அரசியலை நோக்கி கடைக்கோடியிலிருந்து உறுதியாக பணியாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.
அவரைத் தொடர்ந்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பொது செயலாளர் ஷாகித் சித்தீகி அவர்கள் சமூக பணிகளில் இமாம்கள் (மார்க்க அறிஞர்கள்) கடமையை பற்றி உரையாற்றினார். சுதந்திர போராட்டத்தில் இமாம்கள் ஆற்றிய தியாகங்களை நினைவு கூர்ந்து தற்போது சமூக நீதிக்கான போராட்டத்திலும் மக்களை பயிற்றுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் பேராசிரியர் நாஸ்னி பேகம் அவர்கள் முஸ்லிம் பெண்கள் சக்திபெறுவது பற்றி உரையாற்றினார். இஸ்லாமிய வரலாற்றில் பெண்கள் ஆற்றிய சேவைகளை பற்றி குறிப்பிட்டுவிட்டு இக்காலத்தில் பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டிய அவசியத்தை பற்றி விவரித்தார்.
அவரைத் தொடர்ந்து மில்லி கெசட் ஆசிரியர் ஸஃபருல் இஸ்லாம் அவர்கள் பொருளாதார முன்னேற்றமும் என்.ஜி.ஒ. மற்றும் சுய உதவி குழுக்களின் முக்கியத்துவத்தை பற்றி விவரித்தார். அதன்பின் சமாஜ்வாதி பார்ட்டியின் தேசிய செயலாளர் கமால் ஃபாருக்கி அவர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி பேசினார். முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கும் சட்டங்களை பற்றி குறிப்பிட்டார்.
நீதியைபெறுவது மக்களின் உரிமை  பாப்புலர் ஃப்ரண்ட் சமூக நீதி மாநாட்டு கருத்தரங்கு
பாப்புலர் ஃப்ரண்ட் சமூக நீதி மாநாட்டின் முதல் நாளான நவம்பர் 26 ம் தேதி மதியம் 2 மணியளவில் “நீதியை பெறுவது மக்களின் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவங்கியது. இந்த கருத்தரங்கிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி. கோயா அவர்கள் தலைமை தாங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமத் கருத்தரங்கின் கருப்பொருளை பற்றி உரையாற்றினார். அவரது உரையில் நாம் முதலில் வெள்ளைகாரனிடம் அடிமைப்பட்டு விடுதலை பெற்ற பின்னர் ஆட்சியாளர்களிடம் தற்போது அடிமைப்பட்டு கிடக்கிறோம். ஒரு சில ஆயிரங்களுக்காக விதார்பா போன்ற பகுதிகளில் சுமார் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் கைகோர்த்து ஆதிவாசிகளின் இருப்பிடங்களை விட்டு விரட்டி அடித்துள்ளார்கள். முதலாளித்துவம் போன்ற மக்கள் விரோத கொள்கைகள் ஒரு புறம், மறுபுறத்தில் வகுப்புவாத கலவரங்களும் நடந்து நாட்டில் இரத்த ஆறு ஒட்டப்பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் பெரும் பகுதிகளில் ராணுவம் அல்லது சிறப்பு பாதுகாப்பு படைகளே ஆட்சி செய்கிறது. இந்த அவல நிலை நீங்க போராட வேண்டும் என்று பேசினார்.
அவரை தொடர்ந்து தேஜஸ் பத்திரிகை செயலாசிரியர் என்.பி.செக்குட்டி மீடியா பற்றி பேசினார். முன்பொரு காலங்களில் மீடியாக்கள் செயல்பட பொருளாதாரத்திற்கு பெரும் அவதியுற்ற நிலை. ஆனால், உலகமயமாக்கலுக்கு பின்பு பெரும் முதலீடு பெறும் நிறுவனமாக மீடியா மாறியுள்ளது. மீடியாவில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெருமளவிலான பணம் வாரி இறைக்கப்படுகின்றது. இதன், பின்னணியில் பார்த்தோமென்றால் இந்திய மீடியாக்கள் மேற்கத்திய மீடியாக்களினால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன.  எனவே, பொருளாதாரத்தை அடிப்படையாக இல்லாமல் மக்கள் நலனுக்காக போராடும் ஒரு மீடியா நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவன் அவர்கள் சமூக நீதியை பற்றி பேசினார். சட்ட மேதை திரு.பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்பட தேவையான சமத்துவம் அனைத்து சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம், சமூக நீதி போன்ற விஷயங்களை பற்றி குறிப்பிட்டார். சமூக நீதி பெற இடஒதுக்கீட்டின் அவசியத்தை பற்றி குறிப்பிட்டுவிட்டு இதற்காக முஸ்லிம்களும் தலித்களும் இணைந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் செயலாளர் அப்துல் ரஷீது அஹ்வான் அவர்கள் பிரதிநிதித்துவ அரசியல் பற்றி உரையாற்றினார். தற்போது நடப்பில் இருக்கும் அரசியல் முறைப்படி சிறு கட்சிகள் அதிகாரத்திற்கு வருவது என்பது இயலாத காரியம் எனவும் ஒரு கட்சி பெறும் மொத்த ஒட்டுக்களின் அடிப்படையில் பதவி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து ஆல் இந்தியா செக்கூலர் ஃபோரம் தேசிய கன்வீனர் சுரேஷ் கைர்னார் அவர்கள் குண்டு வெடிப்புக்களும் பலிகடாக்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த வரலாற்றாசிரியர் பேராசிரியர் எம்.எஸ். ஜெயப்பிரகாஷ் அவர்கள் ஷோசியலிஷமும் சமூக நீதியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். 1909 ல் மாண்டெக் பரிந்துரைகள், 1928 ல் சைமன் கமிஷன், 1930 ல் இடஒதுக்கீடு பற்றிய டாக்டர் அம்பேத்கரின் பரிந்துரை, 1953 யில் காகனேக்கர் கமிஷனின் பரிந்துரைகள், 1979 மண்டல் கமிஷன், அதனை தொடர்ந்து  இடஓதுக்கீட்டீற்கான வி.பி. சிங்கின் அனைத்து முயற்சிகளும் ஆதிக்க சக்திகளால் தோற்கடிக்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து அஹமதாபாத் வணிக யூனியனை சேர்ந்த ஹாசிம் ராய் அவர்கள் மோதல் கொலைகளை (போலி என்கவுண்டர்) பற்றி பேசினார். எந்த ஒரு மனிதனும் எத்தகைய குற்றம் செய்திருப்பினும் நீதிமன்றம் வழியாகத்தான் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால், இன்று காவல்துறை தாங்களே ஒருவரை இவ்வுலகில் வாழ தகுதியில்லை என்ற அடிப்படையில் கொலை செய்வது ஜனநாயக விரோத செயலாகும் என்று குறிப்பிட்டார்.
அதன் பின் ஆல் இந்தியா பாபர் மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டி கன்வீனர் வழக்கறிஞர். ஜாப்ரீயாப் ஜீலானி அவர்களும் பின்னர் அனைத்து இந்திய தலீத் ஆதிவாசிகளின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் உதித் ராஜ் அவர்களும் சமூக நீதியினை வலியுறுத்தி பேசினர்.
இறுதியாக மேற்கு வங்க பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் சையது ஷஹாபுதீன் அவர்களின் நன்றியுரையுடன்  மாலை 5.15 மணியளவில் கருத்தரங்கு முடிவிற்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *