பொதுவாக உலகளாவிய அளவிலும், குறிப்பாக அரபுலகிலும் ஊடகங்களில் விவாதத்திற்குரிய கருப்பொருளாக மாறியுள்ள தலைப்பு தான் இக்கட்டுரைக்கும் தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அரபு வசந்தம் பூத்துக்குலுங்கிய நாடுகளில் ஜனநாயக முறையில் நடந்த தேர்தல்களில் ‘இஸ்லாமிஸ்டுகள்’ என மதசார்பற்றவாதிகளால் அழைக்கப்படும் இஸ்லாத்தை லட்சியமாக கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஆட்சியை கைப்பற்றியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களின் கற்பனையில் உதித்து பரப்புரைச் செய்யப்பட்ட இஸ்லாமிக் மிலிட்டன்ஸிக்கு (இஸ்லாமிய தீவிரவாதம்) பதிலாக மக்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாமியவாதிகளை தேர்ந்தெடுத்ததுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணமாகும். இந்த நாடுகளில் எல்லாம் இஸ்லாமியவாதிகள் ஆட்சியை கைப்பற்றியது துப்பாக்கி முனையிலோ அல்லது தங்களது பலத்தை பிரயோகித்தோ அல்ல. மாறாக வாக்குச்சீட்டு மூலமாகும்.
துனீசியாவிலும், எகிப்திலும், லிபியாவிலும் வீதிகளில் இஸ்லாமியவாதிகள் வரவேற்கப்படுவதும், அவர்கள் கௌரவிக்கப்படுவதற்கும் காரணம் வேறொன்றும் அல்ல; இஸ்லாமிய கட்சிகள் ஆட்சியை பிடித்தால் ஜனநாயகம் வீழ்த்தப்படும் என இவ்வளவு காலமும் பறை அறிவித்து அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியவர்களுக்கு அதே ஜனநாயக முறையை பயன்படுத்தி சரியான பதிலடியை கொடுத்துள்ளார்கள் இஸ்லாமிய கட்சியினர். கிடைத்த முதல் வாய்ப்பையே நாட்டின் புனர்நிர்மாணத்திற்கு இஸ்லாமிய கட்சிகள் பயன்படுத்துவார்களானால் ஒரு காலத்திலும் தேசிய நீரோட்டத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த உலகில் எந்த சக்தியாலும் முடியாது. அதற்கு மாற்றமாக நடந்தால் எந்த வாக்குச்சீட்டு மூலமாக ஆட்சியில் மக்கள் இஸ்லாமிய கட்சிகளை அமர்த்தினார்களோ அதே வாக்குச்சீட்டு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றவும் செய்வார்கள். அரபு சமூகம் கனவு காணும் அனைவருக்கும் நீதி கிடைக்கும் ஒரு ஆட்சி முறையை உருவாக்குவதுதான் இஸ்லாமிய கட்சிகளின் முன்னால் உள்ள முக்கிய பணியாகும்.
பல வருடங்களாக ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் சுயமாக உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ஆளப்பட்ட அரபு நாடுகள் எல்லாம் அவை சுதந்திரமாக இருந்த காலக்கட்டங்களில் உலகிற்கு விலைமதிப்பற்ற பல்வேறு நன்கொடைகளை அளித்த இஸ்லாத்தின் மையங்களாக செயல்பட்டன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எகிப்து ஒரு காலத்தில் அரபு இஸ்லாமிய கலாச்சாரத்தின் மையமாக திகழ்ந்தது. பிற்காலத்தில் அதிகாரத்தை கைப்பற்றிய ஏகாதிபத்தியவாதிகள் சொந்த நாட்டு குடிமக்களை இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக கொண்டார்கள் என்ற காரணத்திற்காக சிறையில் அடைத்தனர். அத்தோடு அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு கொலையும் செய்தனர்.
தொன்னூறுகளின் இறுதியில் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் கிங் சவூத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய ஒரு எகிப்திய பேராசிரியர் அரபு கலாச்சாரத்தை குறித்து உரை நிகழ்த்தும் வேளையில், தனது சொந்த நாட்டைக்குறித்து அவர் கூறும்பொழுது ‘செய்யத் குதுபும், ஹஸனுல் பன்னாவும் போன்ற தீரர்களை இழந்தது தான் எகிப்தின் சாபம்’ எனக்குறிப்பிட்டார்.
இது வெறும் ஒரு தனிநபரின் உணர்வு அல்ல. மாறாக ஒரு சமூகத்தின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த வேதனையாகும். அந்த வேதனையைத்தான் அவர்கள் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே பயன்படுத்தி அரபுலக மக்கள் இஸ்லாமியவாதிகளை வெற்றி பெறவைத்துள்ளார்கள்.
ஏகாதிபத்திய நாடுகள் உளமாற ஆதரவும் உதவியும் அளித்தபோதிலும் அரபு சோசியலிஸ்டு கட்சிகள் அஸ்தமனத்தின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அரபு தேசியத்தின் பெயரால் வளர்ந்த கட்சிகளும், அரபு பாத் கட்சியினரும், அரபு தாராளமய வாதிகளும் எல்லாம் அரபுலகின் நினைவுச்சின்னங்களாக மாற அதிகநாள் தேவைப்படாது. ஒரு போதும் கேள்வி கேட்க்கப்படாமல் ஆதிக்கம் செலுத்திய இவர்களின் பெயர்களை கூட உச்சரிக்க அரபு நாடுகளில் ஆட்கள் இல்லை. அதற்கு பதிலாக அனைத்து ஊடக அவதூறுச் செய்திகளையும், பொய்ப்பிரச்சாரங்களையும், ஏகாதிபத்திய சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு இஸ்லாமிய கட்சிகள் தேர்தல்களில் முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
வருடக்கணக்கில் நீடித்த சித்திரவதைகளாலும், அடக்கு முறைகளாலும், தடைகளாலும் இஸ்லாமிய இயக்கங்களை அழிக்கவோ, அதன் உறுப்பினர்களின் உணர்வுகளை உருக்குலைக்கவோ மக்கள் மனங்களில் அவர்களின் செல்வாக்கை குறைக்கவோ சர்வாதிகார ஆட்சியாளர்களால் இயலவில்லை. அரசியல் பாடத்தை கற்கும் மாணவர்கள் இதனை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரபு நாடுகளில் சுதந்திரத்தின் காற்று வீசத்துவங்கியது முதலே இஸ்லாமிய கட்சிகள் முன்னேறுவதை கண்ணுற்றோம்.
புரட்சிக்கு பிந்தைய துனீசியாவில் இஸ்லாமியவாதிகள் முதன் முதலாக ஆட்சியை பிடித்தனர். தொடர்ந்து புதிய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த மொரோக்கோவிலும்,ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு எகிப்தில் நடந்த தேர்தலிலும், இஸ்லாமியவாதிகள் முன்னேறிய வேளையில், லிபியாவில் முஅம்மர் கத்தாஃபிக்கு பிறகு புதிய மாற்றங்களுக்கு தலைமை வகிப்பதும் இஸ்லாமியவாதிகள் ஆவர்.
ஏன் அரபு சமூகம் இஸ்லாமியவாதிகளை தங்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும் பிரதிநிதிகளாக கருதுகின்றனர்? என்ற கேள்வி நியாயமானதே! உலக ஊடகங்களில் இதுகுறித்த விவாதங்கள் இன்று சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இஸ்லாம் வெறும் ஆன்மீக தியான வணக்கவழிபாடுகளுடன் ஒதுங்கும் மார்க்கம் அல்ல, அது மனிதனின் சிந்தனையையும், கலாச்சாரத்தையும் வார்த்தெடுக்கும் முக்கிய காரணியாகும். மனிதனின் ஆன்மீக, சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார துறைகளை சூழ்ந்து நிற்கும் உயிர் துடிப்பான ஒரு சிறப்புமிக்க தத்துவம் இஸ்லாம் என்பதை அரபுலக மக்கள் உணர்ந்தார்கள்.
ஆகையால்தான் மனிதர்களில் இருந்து அகன்று இருக்கும் சர்வாதிகாரிகளையும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் உலக ஆதாயத்தை அடிப்படையாக கொண்ட தத்துவங்களையும் புறக்கணித்துவிட்டு தங்கள் வாழ்க்கையின் முழுமையான வெற்றிக்கு இஸ்லாமும், இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமியவாதிகளும் காரணமாக முடியும் என்பதை அரபு சமூகம் அடையாளம் கண்டு கொண்டது.
உண்மையான இஸ்லாமிய சட்டதிட்டங்களும், ஆட்சிமுறையும் தீவிரவாதம் அல்ல என்பதையும், மாறாக மனித நேயத்தின் அடிப்படையிலானது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இஸ்லாமும், ஜனநாயக முறையும் கைகோர்த்து நடக்கும் துருக்கியின் பரிசோதனை அவர்களை சிந்திக்க வைத்துள்ளது. அரபு வசந்தத்தையும், தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள் தலைமையிலான ஆட்சியையும் பொதுவாக உலகமும், குறிப்பாக அரபுலகமும் சுபச் செய்தியாகவே காண்கின்றன.
அரபு வசந்தம் அல்ல! இஸ்லாமிய வசந்தம்!
எகிப்தில் நடந்த புரட்சியின் துவக்க நாட்களில் ராணுவம் பின்வாங்கியதால் பாதுகாப்பு முறைகள் சீர்குலைந்தன. சிறைச்சாலைகளின் வாசல்கள் திறக்கப்பட்டு கைதிகள் தப்பிச் சென்றனர். ஆனால், புரட்சி துவங்கிய நாட்களில் சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமியவாதிகள் மட்டும் சிறையை விட்டு வெளியேறõமல் இருந்ததை கண்ட அல்ஜஸீராவின் செய்தியாளர் ‘ஏன் சிறையை விட்டு நீங்கள் வெளியேறவில்லை? என கேள்வி எழுப்பியபொழுது நாட்டின் சட்டத்தை மீற எங்களுக்கு விருப்பமில்லை’ என இஸ்லாமியவாதிகள் பதிலளித்தனர்.
சிறையில் இருந்த அனைத்து கைதிகளும் தப்பிச் சென்றபிறகு, நாட்டின் சட்ட கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னர்தாம் இஸ்லாமியவாதிகள் சிறையில் இருந்து வெளிவந்தனர் என்பதை அல்ஜஸீரா ஆச்சரியத்துடன் உலகிற்கு எடுத்தியம்பியது. இஸ்லாத்திற்கு முரணõக இருந்தபோதிலும் நாட்டில் அமுலில் இருந்த சட்டத்தை இவ்வளவு தூரம் அங்கீகரித்த குழுவினரையா எகிப்தை ஆண்ட சர்வாதிகாரிகள் தேசத்துரோகிகள் என அழைத்து இவ்வளவு காலமும் தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றினர்? என்பதை நாம் நினைவுகூற வேண்டும்.
அரபு நாடுகளில் முதன்முதலாக நடைபெற்ற ஜனநாயகரீதியிலான தேர்தலுக்கு பிறகு அரபு வசந்தத்தைக்குறித்து ஒரு அரபு பத்திரிகையாளர் கூறியது என்னவெனில், ‘இது அரபு வசந்தம் அல்ல! மாறாக இஸ்லாமிய வசந்தமாகும்! ஆம்! இஸ்லாமியவாதிகள் வரலாற்றில் முதன்முறையாக மக்களோடு நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அரபு நாடுகளில் இஸ்லாமிய இயக்கங்கள் முன்னேற்றத்தின் பாதையில் இருந்தாலும் அவர்களுக்கு முன்னால் ஏராளமான நெருக்கடிகள் காத்து இருக்கின்றன என்பது உண்மையாகும். அதிகாரிகளின் பலப்பிரயோகம் இல்லாமல், ஏகாதிபத்திய சட்டத்திட்டங்களின் எல்லைகள் இல்லாமல் மக்களை நேரடியாக சந்திக்க கிடைத்த வாய்ப்பை அவர்கள் எவ்வாறு உபயோகப்படுத்த போகிறார்கள் என்பது முக்கியமாகும்.
இஸ்லாமிய வாதிகளை பழைய அளவு கோல்களை பயன்படுத்தி அளப்பது சாத்தியமல்ல. இஸ்லாமிய இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்த சுற்றுச்சூழல்கள் முற்றிலும் மாறியுள்ளன. இம்மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்முறைகளை வகுத்து செயல்பட வேண்டும். ராணுவத்தின் அடக்குமுறைகள், ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்ககள் காரணமாக பொது சமூகத்தில் உருவான மோசமõன நம்பிக்கைகளை எல்லாம் இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் பாதித்திருந்தது. இன்று அவையெல்லாம் துடைத்தெறியப்பட்டுள்ளன.
ஆதலால், மக்களை நெருங்குவதற்கான புதிய அணுகுமுறைகளையும், வெகுஜன தொடர்பு குறித்த ஃபிக்ஹ்களையும் (மார்க்க சட்டங்கள்) இஜ்திஹாத் (ஆய்வு) செய்து தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நவீனகால வரலாற்றில் ஒரு வேளை முன்பு எப்பொழுதும் இல்லாத சூழல்களை இஸ்லாமியவாதிகள் சந்திக்க வேண்டிவரும். ஏதேனும் வகையிலான புரட்சிகள் மூலம் அல்ல. மாறாக, மக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்த இஸ்லாமிய கட்சிகளுக்கு நாட்டின் மக்களுடைய விருப்பங்களை பாதுகாக்கும் ரீதியிலான இஸ்லாமிய சூழல்களை உருவாக்க வேண்டும்.
அரபுலகில் மீண்டு வந்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள் சிந்தனை ரீதியாகவும், செயல்ரீதியாகவும் இஸ்லாத்தின் சிந்தனைகளை தற்கால அரசியல் சூழல்களுடன் இணைப்பதில் ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. துனிசீயாவில் அந்நஹ்ழாவின் தேர்தல் வெற்றிக்குப்பிறகு அக்கட்சியின் தலைவர் ராஷித் அல் கன்னோஸி நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியது என்னவெனில்; நாட்டில் சமூக, கலாச்சார, அரசியல் சூழல்களை மதிப்பீடு செய்து அதற்கு ஒத்த செயல்களத்தை உருவாக்க இஸ்லாமிய கட்சிக்கு முடிந்தவரை சாத்தியமாகும் என்பதாகும். இறுதியாக, இஸ்லாமிய கட்சிகள் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள நாடுகளில் அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் மாற்றி அமைப்பதில் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் அவர்களது வெற்றி அமைந்துள்ளது. அரபு நாடுகள் எதிர்கொள்ளும் சமூக, அரசியல் ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இஸ்லாமியவாதிகளின் கைகளில் அலாவுதீனின் அற்புத விளக்கு ஒன்றும் இல்லை. அதேவேளையில், புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றத்தையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஊடகங்களின் துணையுடன் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள், இஸ்லாமியவாதிகள் ஆட்சியில் அமர்ந்தால் பழையதும், மக்கள் விரோதமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் அது முன்னேற்றத்தை பின்னோக்கி இழுக்கும் என்றும் பரப்புரை செய்கின்றார்கள். எவ்வித மாற்றத்திற்கும் தயாராகாமல், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பயணிக்க தெரியாதவர்கள்தாம் இஸ்லாமியவாதிகள் என்பது இஸ்லாமிய விரோதிகளின் பிரச்சாரமாகும். இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் வழிமுறை எல்லா இடங்களிலும் ஒரேபோலத்தான். இஸ்லாமிய அமைப்புகள் மாற்றத்தை அங்கீகரித்தால் அது மோசடி என்றும், மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறுவார்கள். மாற்றத்தை அங்கீகரிக்காவிட்டால் தீவிரவாதிகள் என்றும், நாகரீகம் இல்லாதவர்கள் என்றும் முத்திரைகுத்துவார்கள். இஸ்லாமிய எதிரிகளின் இத்தகைய சூழ்ச்சிகளை அடையாளங்கண்டு மக்களின் பௌதீக, தார்மீக, அரசியல், கலாச்சார, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயன்றால் அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் விலைமதிப்பற்ற நன்கொடைகளை இஸ்லாமிய கட்சிகளால் அளிக்க இயலும்.